×

மேலப்பாதி ஜுரகரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

செம்பனார்கோவில்,அக்.10: நாகை மாவட்டம் மேலப்பாதி சுந்தரநாயகி அம்மன் உடனாகிய ஜுரகரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. நவராத்திரி நான்கு வகைப்படும் ஆனி மாதம் வருவது ஆஷாட நவராத்திரி தை மாதம் வருவது மகா நவராத்திரி, பங்குனி மாதம் வருவது வசந்த நவராத்திரி ஆகும். ஆனால் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் தசரா நவராத்திரியே மிகவும் சிறப்புடையதாக மக்கள் கருதுகின்றனர். நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் சுந்தரநாயகி அம்மன் உடனாகிய ஜுரகரேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக கலசபூஜை, கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து 8 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் சுந்தரநாயகி அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது.  இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் ஊர் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் சங்கல்பம் செய்து 1008 மந்திரம் படித்து குங்குமத்தால் லலிதா சகஸ்நாம
அர்ச்சனை செய்யப்பட்டது.

பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அபிராமி அந்தாதி பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடும், ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது. 19ம்தேதி அம்பு எய்தும் நிகழ்ச்சியோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.  விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை இந்து அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் சிவக்குமார் அறிவுரைப்படி கோயில் ஆய்வாளர் பாலு, செயல் அலுவலர் முருகேசன், குருவார வழிபாட்டு மன்ற தலைவர் நாகராஜன், மன்ற பொதுச்செயலாளர் அன்பழகன், கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Navarathri Festival ,Melaapati Jurakreshwara ,
× RELATED மானாமதுரையில் நவராத்திரி விழா: பக்தர்களை கவரும் கொலு பொம்மைகள்